temperature increase onwards coming months in Tamilnadu - Go General

Education, General tips and Health tips

Wednesday 7 March 2018

temperature increase onwards coming months in Tamilnadu


தமிழகத்தில் கொளுத்தும் வெயில்.. இனி வரும் மாதங்களில் அதிகரிக்குமா?
 
இனி வரும் மாதங்களில் தமிழகத்தில் வெயில் கொளுத்தும்...!

கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க துவங்கிவிட்டது. இந்த ஆண்டு கோடை வெயில் உச்சக்கட்டத்தை எட்டும் என்பதற்கு அடையாளமாக பல்வேறு மாவட்டங்களின் வெயில் வாட்டி எடுக்கிறது. பருவமழைக்கு முந்தைய (மார்ச்-மே) மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்த அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் :

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சராசரியாக வெப்பத்தின் அளவு 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கோடை மழை தொடங்குவதற்கான காலம் ஏப்ரல் இறுதிவரை ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் தென் மாநிலங்களை விட அதிகளவு வெப்பம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தொடங்கிய கோடை :

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும் வெப்பம் இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை மக்கள் அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.

வழக்கமாக மே மாதமே இந்த அளவு வெப்பம் இருக்கின்ற நிலை மாறி மார்ச் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ளதும், இரவு நேரங்களிலும் வெப்பம் தகிப்பதும் மக்களை கடுமையாக வாட்டத்தொடங்கியுள்ளது.

கோடைக்காலம் தொடங்கும் நிலையிலேயே பிப்ரவரி மாத இறுதி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில் மதுரை, கோவை, தருமபுரி, சேலம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வழக்கத்தைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகியுள்ளது.

காற்றின் திசை, வறண்ட வானிலை, காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து காணப்படுவது போன்றவை வெப்பம் அதிகரிக்க காரணமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழையில் ஏற்பட்டு வரும் நிலையற்ற தன்மையால் தற்போது கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது.

No comments: