How to face the summer...? - Go General

Education, General tips and Health tips

Monday 19 March 2018

How to face the summer...?


கோடைகாலத்தில் என்னென்ன செய்யலாம்?
குளியல் :

சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்தக் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது சிறந்தது. உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் நீராடுவது பயன்தரும். வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

மண்பானை நீர் :

வெயில்காலத்தில் நீரை குளிரவைத்து குடிப்பதற்காக வாய் குறுகிய மண்பாண்டங்களை சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். நீரைக் குளிர்விப்பதற்கு குளிர்சாதன பெட்டியைவிட, மண்பானைகளே ஆரோக்கியமானவை. ஃபிரிட்ஜ்களில் குளிரூட்டப்பட்ட நீரைக் குடிப்பதால், தொண்டை அலர்ஜி, தலை பாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் கிருமித் தொற்றுகளின் தாக்கம் பெருகவும் ஃபிரிட்ஜ் நீர் வழிவகுக்கிறது.

பொருத்தமான ஆடைகள் :

ஜீன்ஸ் பேன்ட் மற்றும் நம் தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத இறுக்கமான ஆடைகளை அணிவது, உடலுக்குத் தீங்கானதே. குறிப்பாக வெயில் காலத்தில் இவ்விதமான இறுக்கமான உடைகளால், பலவிதமான தோல் நோய்கள் உண்டாகின்றன. உடலை உறுத்தாத மெல்லிய உடைகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை. வெயில் காலத்தில் ஆபரணங்கள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதனால் தேவைப்படும்போது மட்டும் அணிந்துகொள்ளலாம்.

வாசனைப் பொருட்கள்:

வியர்வை நாற்றத்தை தடுக்கப் பல வகையான செயற்கை வாசனைத் திரவியங்கள் தரமானவையா, நம் உடலுக்கு ஏற்றவையா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. அதிகரிக்கும் வியர்வையோடு சேரும் செயற்கை திரவியம் வேதியியல் மாற்றம் அடைந்து, ஒரு வித்தியாசமான நாற்றத்தை உண்டாக்குவதோடு, அரிப்பு, ஒவ்வாமை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.

ஆவாரை தலைப்பாகை :

போக்குவரத்து வசதி இல்லாத காலங்களில் நெடுந்தூர நடைப்பயணம் மேற்கொள்வோரும் சரி, வெயிலில் உழைக்கும் விவசாயிகளும் சரி, வெப்பத்தைத் தடுப்பதற்குப் பயன்படுத்திய முக்கிய இயற்கை உபகரணம் ஆவாரை இலையும், பூவும். தலையில் ஆவாரை இலை, பூக்களை வைத்துக் கட்டிக்கொண்டு அல்லது முண்டாசுக்கு அடியில் வைத்துக்கொண்டு வெப்பத்தை தணித்துக்கொண்டனர். இன்றைய காலத்தில் அப்படித் தலையில் கட்டிக்கொண்டு வெளியே செல்ல முடியாது.

எனினும் வீட்டில் இருக்கும்போது, இதை முயற்சிக்கலாம். வெயிலில் தொப்பி அணிந்து செல்லும் பழக்கமுடையவர்கள் தொப்பிக்கு அடியில் ஆவாரை இலை, பூ மற்றும் வேப்ப இலைகளை வைத்துக்கொள்ளலாம். ஆவாரை தலைப்பாகையானது, உடலில் உண்டாகும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை கொண்டது. அதிக வெப்பத்தால் உண்டாகும் தலைவலியையும் தடுக்கும்.

No comments: